இளையராஜா, வைரமுத்து இணைய வேண்டும், இயக்குனர் தாமிரா நெகிழ்ச்சிப் பதிவு
27 Sep 2020
தமிழ் சினிமா உலகில் எத்தனையோ கூட்டணிகள் வந்து போயின. ஆனாலும், இசை உலகில் இளையராஜா, வைரமுத்து, எஸ்பி பாலசுப்ரமணியம் கூட்டணி கொடுத்த சூப்பர் ஹிட் பாடல்கள் போல வேறு எந்தக் கூட்டணியும் அவ்வளவு அதிகமாகக் கொடுத்திருக்குமா என்பது சந்தேகம்தான்.
அந்தக் கூட்டணி காலம் காலமாக நீடிக்க முடியாதபடி இளையராஜாவும், வைரமுத்துவும் பிரிந்து அவரவர் வழியில் செல்ல ஆரம்பித்து காலங்கள் உருண்டோடிவிட்டது. பல காயங்களுக்கு காலம்தான் மருந்தாக இருக்கும் என்று சொல்வார்கள்.
அப்படி ஒரு மருந்தாக எஸ்பிபியின் மறைவு அவர்களது பிரிவை ஒன்று சேர்த்து வைக்குமா என்பது இயக்குனர் தாமிராவுக்கு மிகப் பெரும் ஆதங்கமாகி இருக்கிறது.
பாலசந்தர், பாரதிராஜா இருவரும் இணைந்து நடித்த ‘ரெட்டச்சுரி’, மற்றும் சமுத்திரக்கனி நடித்த ‘ஆண் தேவதை’ படங்களை இயக்கியவர் தாமிரா. அவருடைய முகப்புத்தகத்தில் இளையராஜாவும், வைரமுத்துவும் மீண்டும் இணைய வேண்டும் என்ற நெகிழ்ச்சிப் பதிவு ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.
“முன்னொரு முறை ஒரு சிறுகதையாக எழுதிய உணர்வுதான்.. இப்போது பாலுசார் மரணத்திற்குப் பிறகு மீண்டெழுந்திருக்கிறது.
பாலுசார் மரணத்தை முன்னிருத்தி இதை இசைஞானிக்கும், கவிப்பேரரசு அவர்களுக்கும் ஒரு கோரிக்கையாகவே வைக்கிறேன்.
உங்கள் பகை களைந்து கை குலுக்கிக் கொண்டால் என்ன?
நீங்கள் மீண்டும் ஒன்றிணைந்தால் தமிழ்ப்பாடல்களை இன்னொரு உயரத்திற்கு இட்டுச் செல்வீர்களென்ற ஒரு பேராசையெல்லாம் இல்லை.இன்னும் சொல்வதானால் நீங்கள் இணைந்திருந்த அந்த காலகட்டத்தை திரும்பப் பெற முடியாது.ஆயினும் நீங்கள் ஒன்றிணைவது காலத்தின் தேவை.
இதில் உனக்கென்ன அக்கறை என்றால் உங்கள் இருவர் வீட்டுக் கூடத்திலும் ஒரு முறையாவது உணவுண்டவன் நான்.
கவிஞரின் கோடம்பாக்கம் வீடு கட்டும் போது, ஒரு உலையில் சோறு பொங்கி உண்ட... கதையை ஜீவா அம்மா சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
ரெட்டச்சுழி திரைப்படம் இயக்கிய சமயம் கவிஞரின் வீட்டுத் திருமணத்திற்கான பத்திரிகை வைக்க இசைஞானி வீட்டிற்கு வருவதாக இருந்தார் ..அப்போது இசைஞானியையும்,கவிஞரையும் எப்படியாவது சந்திக்க வைத்து விட வேண்டும். இந்தப் பகைமைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்து விடவேண்டும் என முயற்சித்தார் ஜீவா அம்மா.
முதலில் கார்த்திக்ராஜாதான் தன் இசையில் கவிஞர் எழுத வேண்டும் என விருப்பப்பட்டார் அதன் நீட்சியாகத்தான் அந்த சந்திப்பை ஏற்பாடு செய்ய முடிவு செய்தார் ஜீவா அம்மா. ஆனால் அது கூடி வரவில்லை.
பின்னாட்களில் யுவன் தன்னிச்சையாக கவிஞரை பாடல் எழுத வைத்ததும் அதன் தொடர்ச்சியாக அவர்கள் கூட்டணி ஒரு நல்ல கூட்டணியாக அமைந்ததும் நிகழ்ந்தது.
ஜீவா அம்மா மரணித்த அன்று முழுக்க நான் அங்குதான் இருந்தேன். எல்லோரும் வந்துகொண்டிருந்தார்கள் கவிஞரைக் காணவில்லை அவருக்குப் போன் செய்து கேட்ட போது இல்ல தாமிரா நா காலையிலேயே வந்து பாத்துட்டு வந்துட்டேன் அதெப்படி வராமல் இருப்பேன் எனச் சொல்லி நீண்ட நேரம் ஜீவா அம்மாவின் தாயுள்ளம் கொண்ட குணநலன்களை அவர்கள் குடும்பமாக ஒன்றிணைந்திருந்த காலகட்டத்தை நினைவு கூர்ந்தார்.
இவையெல்லாம் தான் நான் மௌனமான நேரம் என்ற தலைப்பில் இவர்கள் ஒன்றிணைய வேண்டும் என கதை எழுதக் காரணியாக இருந்தது.
அந்தக்கதை விகடனில் வெளியான அன்று காலை முதலில் கவிஞரிடமிருந்துதான் போன் வந்தது. அதுவும் அதிகாலை ஆறுமணிக்கு...மிக நுட்பமாக எழுதப்பட்டிருக்கும் கதை,அபாரமான எழுத்து நடை. சிறப்பா எழுதியிருக்கீங்க தம்பி ஆனா உங்கள் பேராசை ஒரு போதும் சாத்தியமில்லாதது.. இதற்கு மேல் இதைப் பேச வேண்டாம் என்றார்.ஆனாலும் அந்த பாராட்டிலும் பேச்சிலும் ஒரு உள்ளார்ந்த ப்ரியம் இருப்பதை உணர்ந்தேன்.
அதன் பின் பல முறை இசைஞானி குறித்துப் பேசி இருக்கிறோம் அந்தப் பேச்சில் இருவருக்குமான இடைவெளி இருக்குமே தவிர வெறுப்பு இருந்ததில்லை.
யுவன் கவிஞரை வைத்து பாடல் எழுதப்போகிறேன் என்று சொன்ன போது,இசைஞானி அதை கடந்து சென்றாரே தவிர கண்டிக்க வில்லை.
இருவரும் நெடுந்தூரம் கடந்து விட்டார்கள்.. காலம்தான் அவர்களுக்குள் இருந்த சுவரை வலிமையாக்கி விட்டது. அதை உடைத்தெறியும் வல்லமை உள்ளவர்கள் சுவருடைக்க தவறி விட்டார்கள்.
வாழ்வே நிரந்தரமில்லை பகை மட்டுமேன் நிரந்தரமாக இருக்க வேண்டும்.
உங்கள் கடந்த காலத்தை உங்கள் வரலாறை எல்லாம் கடந்து ஒரு நடைபயிற்சியின் போது எதிரெதிரில் சந்தித்துக் கொள்ளும் இரண்டு பெரிய மனிதர்கள் மாதிரி ஒரு புதிய புள்ளியிலிருந்து நீங்கள் ஏன் உங்கள் அன்பைத் தொடரக் கூடாது.
உங்கள் பாடல் தருணங்களில் எத்தனை வெடித்த பேச்சுக்கள் கேலிகள் படைப்பின் கொண்டாட்டத்தில் கிளறும் மகிழ்ச்சி புன்னகை என ஆயிரம் நல்ல தருணங்களை கடந்திருப்பீர்களே.. அதில் ஒரு புன்னகையை கைவிளக்காக எடுத்துக் கொண்டு ஒருவரை ஒருவர் மன்னித்துக் கொள்ளக் கூடாது.
மரணத்தை நோக்கியதுதானே வாழ்க்கை..
இன்னும் ஒருமுறை கூட முகம் பார்க்காமல் இந்த வாழ்க்கையைக் கடந்து விட இயலுமா?
யாரோ ஒருவருக்குப் பின் யாரோ ஒருவர் சொல்லத் தடுமாறும் சொல்லுடன் தவிக்கத்தானே வேண்டும்.
அப்படித் தூக்கிச் சுமக்கும் பகை என்ன சாதித்து விடப் போகிறது. இளையராஜா வீட்டிற்கு வைரமுத்துவோ, வைர முத்து வீட்டிற்கு இளையராஜாவோ போனால் என்ன நிகழ்ந்துவிடப் போகிறது.என்ன குறைந்து விடப்போகிறது.இந்த நிகழ்வை செவியுறும் போது உலகெங்கும் கோடிக்கணக்கான மத்தாப்பூக்கள் பூக்குமே...!அதைவிடவா உங்கள் பகை பெரியது.
நீங்கள் ஒன்றிணைவது அன்பிற்கான புதிய பாடத்திட்டம்.. இந்த உலகம் அன்பாலானது என உரக்கச் சொல்லும் ஒற்றைச் சொல்
பாலு சார் வெறும் பாடகன் மட்டும்தானா? இல்லை அவர் அன்பன். இந்த உலகை அன்பால் பார்த்தவர்.
உங்களை ஒன்றிணைத்த பெருமை அவருக்குக் கிடைக்கட்டுமே..!
அவர் துயில் கொள்ளும் அந்தப் பண்ணைவீட்டுக்குச் செல்லுங்கள் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவிக் கொள்ளுங்கள்..
அந்த மனிதர் மண்ணுக்குள்ளிருந்து வாழ்த்துவார்..காற்றாய் மழையாய் ஓம்காரமாய் வாழ்த்துவார். நீங்கள் கூடிச் சேர்ந்து கோடி விளக்கு ஏற்றுவதை விட ஒரு முறை ஆரத்தழுவிக் கொள்வது அத்தனை ஒளிமிக்க அஞ்சலி...!இதுதான் உங்களை நெஞ்சில் சுமக்கும் கோடான கோடி ரசிகர்களின் உள்ளக் கிடக்கை.
#உற்சவ மூர்த்திகளே ஒரு முறையேனும் சப்பரம் தூக்குபவன் வலியுணருங்கள்...!
என்று அவர் பதிவிட்டுள்
Tags: ilaiyaraaja, vairamuthu, thmira, spb