ஜீ. வி. பிரகாஷ் குமாரின் ' கிங்ஸ்டன்' பட ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

31 Jan 2025

இசையமைப்பாளர் - பின்னணி பாடகர்- நட்சத்திர நடிகர் -தயாரிப்பாளர்- என பன்முக ஆளுமை கொண்ட ' இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'கிங்ஸ்டன்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'ராசா ராசா..' எனும் முதல் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கிங்ஸ்டன்' எனும் திரைப்படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார், திவ்ய பாரதி, அழகம் பெருமாள், 'மேற்குத் தொடர்ச்சி மலை' ஆண்டனி , சேத்தன், குமரவேல், சபுமோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். வசனத்தை தீவிக் எழுத, படத்தொகுப்பு பணியை ஷான் லோகேஷ் கவனிக்க, கலை இயக்கத்தை எஸ். எஸ். மூர்த்தி மேற்கொள்ள, அதிரடியான சண்டை காட்சிகளை திலீப் சுப்பராயன் அமைத்திருக்கிறார். கடல் பின்னணியில் ஃபேண்டஸி அட்வென்ச்சர் ஜானரிலான இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. தினேஷ் குணா கிரியேட்டிவ் புரொடியூசராக பொறுப்பேற்றிருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதுமாக நிறைவடைந்து இருக்கிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த டீசரை ஐந்து மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்ததுடன் படத்தை பற்றிய எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது. இதனைத் தொடர்ந்து எதிர்வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற 'ராசா ராசா..' எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை பாடலாசிரியர் யுகபாரதி எழுத பின்னணி பாடகரும், இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ.வி. பிரகாஷ் குமார் மற்றும் பின்னணி பாடகி சுப்லாஷினி ஆகியோர் இணைந்து பாடி இருக்கிறார்கள். மெலோடியாக வெளியாகி இருக்கும் இந்த பாடல்... அனைத்து தரப்பு இசை ரசிகர்களின் வரவேற்பையும், ஆதரவையும் பெற்று வருகிறது.

Tags: gv prakashkumar, kingston, first single

Share via:

Movies Released On February 14