டாடா இயக்குனரின் அடுத்த படத்தில் ஜெயம் ரவி
05 Oct 2024
'இருட்டு', 'தாராள பிரபு', 'எம்ஜிஆர் மகன்', 'இடியட்', 'சாணி காயிதம்', 'அகிலன்' உள்ளிட்ட வெற்றி படங்களையும் 'மத்தகம்' இணைய தொடரையும் தயாரித்துள்ள ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம், வெற்றிப்பட இயக்குநர் எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் 'பிரதர்' திரைப்படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ளது.
ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா சாவ்லா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள 'பிரதர்' திரைப்படம் தீபாவளி அன்று உலகெங்கும் வெளியாகவுள்ள நிலையில் ஸ்க்ரீன் சீன் மீடியா நிறுவனம் ஜெயம் ரவியுடன் மீண்டும் இணைகிறது.
ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனத்தின் சார்பில் சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் உருவாகவுள்ள 'ஜெ ஆர் 34' என்று அழைக்கப்படும் ஜெயம் ரவியின் 34-வது படத்தை 'டாடா' வெற்றிப் படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு இயக்குகிறார். பெரிய பட்ஜெட்டில் இப்படம் உருவாக உள்ளது. 'அகிலன்' மற்றும் 'பிரதர்' படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ஜெயம் ரவி உடன் ஸ்கிரீன் சீன் நிறுவனம் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரதர்' திரைப்படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள பாடல்கள் பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில் 'ஜெ ஆர் 34' திரைப்படத்திற்காக ஸ்கிரீன் சீன் மீடியா மற்றும் ஜெயம் ரவியுடன் ஹாரிஸ் ஜெயராஜ் மீண்டும் கைகோர்க்கிறார்.
டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் இதில் நடிக்க உள்ள முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்களை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் விரைவில் அறிவிக்கும்.
Tags: jayam ravi 34, jayam ravi, ganesh k babu, hariish jeyaraj