துல்கர் சல்மானின் “லக்கி பாஸ்கர்” செப்டம்பர் 7ல் ரிலீஸாகிறது

09 Jul 2024

 

சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸின் பிரம்மாண்டமான பான்-இந்திய திரைப்படமான, நடிகர் துல்கர் சல்மானின் 'லக்கி பாஸ்கர்' செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகிறது!

பல மொழி நடிகரும் இந்திய சினிமாவின் பெரிய நட்சத்திரங்களில் ஒருவருமான துல்கர் சல்மான் 'லக்கி பாஸ்கர்' படத்தில் நடித்துள்ளார். 1980 களின் பிற்பகுதியிலிருந்து 1990 களின் முற்பகுதி வரை ஒரு வங்கி காசாளரின் அசாதாரண வாழ்க்கையை விவரிக்கும் ஒரு திரைப்படமான 'லக்கி பாஸ்கர்'- ஐ பிளாக்பஸ்டர் இயக்குநர் வெங்கி அட்லூரி மிக பிரமாண்டமாக எழுதி இயக்குகியுள்ளார். இப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. மேலும், படத்திற்காக தயாரிப்பாளர்கள் எண்பதுகளின் மும்பையை (அப்போது பம்பாய் என்று அழைக்கப்பட்டது) ஹைதராபாத்தில் சில விலையுயர்ந்த மற்றும் விரிவான செட்களுடன் மீண்டும் உருவாக்கியுள்ளனர். இந்தக் கதை நடக்கும் காலக்கட்டத்தை ஒத்த வங்கிகளை மிகப் பிரம்மாண்டமாக படக்குழு உருவாக்கியுள்ளது.

பெரிய அளவில் தரமான உள்ளடக்கத்தை வழங்க வேண்டும் என்ற ஆர்வத்திற்கு பெயர் பெற்ற தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் 'லக்கி பாஸ்கர்' படத்திற்கும் பிரமாண்டமான செட்களை உருவாக்கத் தயங்கவில்லை. 'லக்கி பாஸ்க'ரின் வாழ்க்கை காலக்கட்டத்திற்கு பார்வையாளர்கள் நிச்சயம் கொண்டு செல்லப்படுவார்கள் எனத் தயாரிப்பாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

தயாரிப்பு வடிவமைப்பாளர் வங்காளன் செட்டுகளுக்கு நம்பகத்தன்மையைக் கொண்டு வர விரிவாக ஆராய்ச்சி செய்து தனது மேம்படுத்தப்பட்ட அனுபவத்தினால் சிறந்த கலைப்படைப்பைக் கொடுத்துள்ளார். பிரபல ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி, லக்கி பாஸ்கரின் பயணத்தை வசீகரிக்கும் பாணியில் படம்பிடித்துள்ளார்.

மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியான டீசர், பாடல்கள் வைரலாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இப்படத்தை முறையே சித்தாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் தயாரித்துள்ளனர். ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் வழங்குகின்றனர். பான்-இந்தியா திரைப்படமான 'லக்கி பாஸ்கர்' தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் வெளியாகிறது. மேலும் விவரங்கள் விரைவில் தயாரிப்பாளர்களால் அறிவிக்கப்படும்.

Tags: Dulquer Salmaan, Sithara Entertainments, Lucky Baskhar

Share via: