கூட்டணி சேர்ந்த ட்ரீம் வாரியர் - இன்வேனியோ ஃபிலிம்ஸ்!!

31 Aug 2023

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் இன்வேனியோ ஃபிலிம்ஸ் இணைந்து 4 புதிய திரைப்படங்களைத் தயாரிக்கவுள்ளனர். இது குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக இரண்டு தயாரிப்பு நிறுவனங்களும் அறிவித்துள்ளன. 

திரைத்துறையின் இரண்டு முக்கியத் தயாரிப்பு நிறுவனங்கள், தங்களது திரைப்படத் தயாரிப்புப் பயணத்தை இணைந்து தொடரவிருக்கின்றன. இது ரசிகர்களுக்கு தரமானத் திரைப்படங்களைத் தரும் நோக்கில், திரைத்துறையில் ஏற்பட்டிருக்கும் ஒரு முக்கியத் திருப்புமுனையாகும். 

தென்னிந்திய திரைப்படத் துறையில் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், இன்வேனியோ பிலிமிஸ் நிறுவனத்துடன் இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கில் நான்கு புதிய திரைப்படங்களை தயாரிக்க உள்ளது.

சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் 'கண்ணிவெடி' (தமிழ்), ராஷ்மிகா மந்தனா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் 'ரெயின்போ' (தெலுங்கு) உட்பட மேலும் இரண்டு பெயரிடப்படாத திரைப்படங்களை இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கவுள்ளன. 

இந்த புதிய கூட்டு முயற்சி குறித்து பேசிய இன்வேனியோ நிறுவனத் தலைவர் அலங்கார் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். "ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் போன்ற அனுபவமிக்கவர்களுடன் ஒரே குழுவில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. படைப்பாற்றல், தொழில்நுட்ப திறன் மற்றும் உயர்தர பொழுதுபோக்கை வழங்குவதற்காக எங்கள் இரண்டு நிறுவனங்களும் இணைந்துள்ளது" என்று அலங்கார் கூறியுள்ளார். 

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் எஸ்.ஆர்.பிரபு பேசுகையில், "இந்த புதிய பயணம் உற்சாகத்தைத் தருகிறது. இரண்டு நிறுவனங்களின் தனித்துவ சிறப்புகளும் எங்கள் படைப்புகளில் பிரதிபலிக்கும். எல்லைகள் தாண்டி அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் நாங்கள் சொல்லப்போகும் கதைகள் வெள்ளித் திரையை உயிர்ப்பிக்கும்" என்றார்.
 

Tags: ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், இன்வேனியோ ஃபிலிம்ஸ், கன்னிவெடி, ரெயின்போ

Share via: