கேஜேஆர் ஸ்டுடியோஸ் கோட்டபாடி ஜே ராஜேஷ் வழங்க, சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘டாக்டர்’.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார், சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன், வினய், சுனில் ரெட்டி, ரெடின், அர்ச்சனா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் வினய் பேசுகையில்,

நெல்சன், சிவா உங்கள் இருவருக்கும் நன்றி. இந்த 15 வருடத்தில் 15 படங்கள் பன்ணியிருக்கிறேன். அனைவருடனும் இன்றும் நல்ல உறவு இருக்கிறது. இந்தப் படத்தில் வாய்ப்பு கிடைத்ததே ஒரு கனவு நிறைவேறியது போலவே இருந்தது. இந்தப்படம் முழுதுமே ஒரு இனிமையான பயணமாக இருந்தது. அனைவருக்கும் இப்படம் பிடிக்கும்.  உங்களுடன் மீண்டும் இணைந்து பணிபுரிய காத்திருக்கிறேன் நன்றி. 

பிரியங்கா அருள் மோகன் பேசியதாவது,

இப்படம் எனக்கு கிடைத்ததை ஆசீர்வாதமாகத்தான் பார்க்கிறேன். என்னுடைய அறிமுக படமே பெரிய படமாக கிடைத்தது மகிழ்ச்சி. SK நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என வளர்ந்துகொண்டே போகிறார், அவருக்கு நன்றி. என்னை அறிமுகப்படுத்திய இயக்குநருக்கு நன்றி. அனிருத் இசை அட்டாகாசமாக இருக்கிறது. அருண் எனக்கு அண்ணாவாக நடித்தார், உண்மையிலும் அண்ணாவாக இருந்தார். இப்படம் மிகப் பெரிய புகழை பெற்று தந்திருக்கிறது. மிகப் பெரிய சந்தோஷத்தை தந்துள்ளது. படமும் மிகப்பெரிய வெற்றி பெறும், நன்றி. 

இயக்குநர் நெல்சன் பேசுகையில்,

சிவகார்த்திகேயன் வழக்கமாக நடிக்கும் அவரது படங்கள் போல் இல்லாமல் இப்படம் இருக்க வேண்டும் என்று அவரிடம் பேசிவிட்டுத்தான் இப்படத்தை எடுக்கலாம் என முடிவு செய்தோம். அவரிடம் இரண்டு ஐடியா சொன்னேன், இரண்டுமே நல்லாருக்கு நீங்களே முடிவு பண்ணுங்கள் என்றார். என் கடமை அதிகமாகிவிட்டது. படம் எடுக்க ஆரம்பித்த இரண்டு வாரத்தில் இது நன்றாக வந்துவிடும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. 

படம் நினைத்தது போலவே ஒரு நல்ல படமாக வந்துள்ளது. சிவகார்த்திகேயனே படத்தயாரிப்பாளர் என்பதால், அது எனக்கு உதவியாக இருந்தது. எந்தக் கேள்வியும் கேட்காமல் முழு சுதந்திரம் தந்தார்கள். விஜய் கார்த்திக் ஒவ்வொரு ஷாட்டுக்கும் கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பார். ஆனால் நினைத்ததை கொண்டு வந்து விடுவார். முழுப்படத்தையும் எடிட் பண்ணிதற்குப்புறம், எனக்கே தெரியாமல் எடிட் செய்துவிட்டார் நிர்மல். அந்தளவு படத்துடன் ஒன்றியிருப்பார். 

ப்ரியங்காவின் முழுத்திறமை இந்தப்படத்தில் வெளிப்படவில்லை, அவருடன் மீண்டும் படங்கள் செய்வேன். வினய் பார்த்துப் பழகும் போது அப்பாவியாக இருந்தார் ஆனால் படத்தில் வில்லனாக அசத்தியுள்ளார். அருணை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். அவரை எல்லாப்படத்திலும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேன் அவர் இல்லாதது மிகப்பெரும் வருத்தம். அனிருத்தை வைத்துதான் திரைக்கதையை எழுதுவேன், அவர் இப்படத்திற்கு மிகப்பெரிய பலம். படமும் நினைத்தது போல அழகாக வந்திருக்கிறது.  படம் பாருங்கள் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும், நன்றி. 

சிவகார்த்திகேயன் பேசியதாவது,

இரண்டு வருடங்கள் கழித்து அனைவரையும் சந்தித்தது மகிழ்ச்சி. எனக்கு பாட்டு எழுதும் நம்பிக்கை எல்லாம் இருந்தது இல்லை. நெல்சன் தான்  அவரது முதல் படத்தில் ஆரம்பித்து வைத்தார். இப்படத்தில் செல்லம்மா பாடல் எளிதாக இருந்தது. ஆனால் ஓ பேபி பாடல் கொஞ்சம் கஷ்டமாக பயமாக இருந்தது. அதிலும் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. மக்களுக்கு பிடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. 

இந்தப்படத்தில் எனக்கு டயாலாக்கே இல்லை.  மொத்தமாகவே ஒரு பத்து டயலாக் தான். எல்லோரும் பேசிக்கொண்டிருக்கும் போது நான் படத்தில் பேசாமல் இருந்தது கஷ்டமாக இருந்தது. ஆனால் நெல்சன் எப்படி என்னை இப்படி யோசித்தார்  என்று தோன்றியது. வினய்யை ‘உன்னாலே உன்னாலே’ படம் பார்த்ததில் இருந்தே பிடிக்கும். நான் உயரமாக இருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் வினய் முன்னால் நடிக்கும் போது எனக்கே ஆப்பிள் பாக்ஸ் போட்டு தான் நின்றேன். மனுஷன் மிகப் பெரிய உயரமாக இருந்தார். அவரது குரலும் பாடியும் படத்திற்கு மிகப்பெரிய பலம். 

ப்ரியங்காவிற்கு தமிழ் தெரிந்தது மிகப் பெரிய உதவியாக இருந்தது. தமிழ் தெரிந்த நடிகையுடன் நடிக்கும் போது, படப்பிடிப்பிலேயே காட்சி எப்படி வரும் என்ற தெளிவு இருக்கும். ரெடின், யோகிபாபு இப்படத்தில் கலக்கியுள்ளனர். அருண் ப்ரோ  இப்படத்தில் செய்தது காலாகாலத்திற்கும் பேசப்படும், அவரை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். விஜய் கார்த்திக் ஒளிப்பதிவு படத்தில் அட்டகாசமாக இருக்கும், தியேட்டரில் பார்த்தால் உங்களுக்குப் புரியும். அனிருத் தான் இந்தப்படத்தை அறிவித்ததிலிருந்தே, இதற்கு அடையாளமாக இருந்ததே அவர்தான். இந்தப்படத்தில் நடித்த அனைவருக்குமே முக்கியமான படமாக இருக்கும். இந்தப் படம் எல்லாருக்கும் பிடிக்கும் ஒரு படமாக இருக்கும், நன்றி. 

அக்டோபர் 9 ந்தேதி இப்படம் உலகமெங்கும் தியேட்டர்களில் வெளியாகிறது.