இயக்குநர் அட்லீ தயாரிக்கும் பேபி ஜான்
08 Feb 2024
இயக்குநர் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் வழங்கும் வருண் தவான் நடிக்கும் திரைப்படத்திற்கு 'பேபி ஜான்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் டைட்டிலுக்கான சிறப்பு வீடியோவும் வெளியானது.
இயக்குநர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'பேபி ஜான்'. இதில் பாலிவுட் நட்சத்திர நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகை வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்தத் திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சினி 1 ஸ்டுடியோஸ் மற்றும் ஏ ஃபார் ஆப்பிள் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் முராத் கெடானி, ஜோதி தேஷ்பாண்டே மற்றும் பிரியா அட்லீ ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இப்படத்திற்கு 'பேபி ஜான்' என பெயரிடப்பட்டு, அதற்குரிய ஃபர்ஸ்ட் லுக் மற்றும் வீடியோ வெளியாகி உள்ளது. இதில் கதையின் நாயகனான வருண் தவானின் ஆக்சன் அவதாரம் பார்வையாளர்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அத்துடன் இந்த திரைப்படம் எதிர் வரும் மே மாதம் 31ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், 'பேபி ஜான்' படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.
இயக்குநர் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் பட நிறுவனத்தின் சர்வதேச தரத்திலான படைப்பு என்பதாலும், தமிழில் 'சங்கிலி புங்கிலி கதவை திற' மற்றும் 'அந்தகாரம்' என இரண்டு திரைப்படங்களை தயாரித்து, விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்றிருப்பதாலும், 'ஜவான்' படத்தின் மூலம் இந்தி திரையுலக வணிகர்கள் மற்றும் சர்வதேச திரையுலக வணிகர்களின் நம்பிக்கையைப் பெற்றிருப்பதாலும், 'பேபி ஜான்' படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
Tags: atlee, baby john, varun dhawan