அரன் இயக்கி தயாரித்து நடித்திருக்கும் படம் ஜிகிரி தோஸ்த்
11 Nov 2023
நண்பர்கள் கதை என்றாலே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு எப்போதும் கொண்டாட்டம்தான். அப்படி ஒரு ஜாலியான நண்பர்கள் பயணம் செல்லும்போது ஏற்படும் திடீர் திருப்பங்களின் கதையாக உருவாகி இருக்கிறது ‘ஜிகிரி தோஸ்த்’. இயக்குநர் ஷங்கரிடம் ’2.0’ படத்தில் பணியாற்றியவரும், ’திறந்த புத்தகம்’, ’கால் நூற்றாண்டுக் காதல்’, ’நீங்க நல்லவரா கெட்டவரா’ ஆகிய குறும்படங்களை இயக்கி, விருது பெற்றவருமான அரன் தயாரித்து , நடித்து எழுதி இயக்கி இருக்கும் படம்தான் ’ஜிகிரி தோஸ்த்’.
ஷாரிக் ஹாசன் அம்மு அபிராமி, வி ஜே ஆஷிக், பவித்ரா லக்ஷ்மி, அனுபமா குமார், கவுதம் சுந்தர்ராஜன் பாடகரும் நடிகருமான சிவம் ஆகியோர் நடித்து இருக்கும் இந்தப் படத்துக்கு ’ஒரு கிடாயின் கருணை மனு’, ’பந்தன்’, ’சத்திய சோதனை’, ’விழித்திரு’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஆர்.வி. சரண் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜி வி பிரகாஷிடம் உதவியாளராக இருந்தவரும், பிரபு தேவா படம் ஒன்றுக்கு இசையமைப்பாளருமான அஸ்வின் விநாயகமூர்த்தி இசை அமைக்கிறார்.
விஞ்ஞானியாக ஆசைப்படும் விக்கி, நடிகனாக ஆசைப்படும் ரிஷி, ஜாலி பேர்வழியான லோகி என்ற மூன்று பால்யகால நண்பர்கள் வாழ்வில் ஒரு நாளில் நடக்கும் கதை இது. விக்கியின் பிறந்த நாளை ஒட்டி நண்பர்கள் மகாபலிபுரம் சொல்ல, வழியில் ஒரு பெண்ணை கேங்ஸ்டர் கூட்டம் ஒன்று காரில் கடத்திக் கொண்டு போவதை இவர்கள் பார்க்கிறார்கள். லோகியைத் தவிர மற்ற இருவரும் அவளைக் காப்பாற்ற முயல, விக்கி கண்டுபிடித்து இருக்கும் டெரரிஸ்ட் ட்ராக்கர் என்ற கருவி மூலம் அவர்கள் அந்தப் பெண்ணை காப்பாற்ற முயல பிறகு என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதை. நண்பர்களின் கலாட்டாவோடு படம் ஜாலியாக இருக்கும் என்கிறார் இயக்குநர். படம் எல்லோரையும் ஈர்க்கும்படி இருக்கும் என்கிறார் இணைத் தயாரிப்பாளர் அர்ஜுனன்.
காட்சியில் இல்லாதவர்களை மனதில் கொண்டு இசை அமைக்கும் சூழல் இந்தப் படத்தில் சவாலாக இருந்தது என்கிறார் இசை அமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி. படம் வெளியாகும் தேதி, டீசர், டிரெய்லர் குறித்தான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
Tags: aran, Jigiri Dosthu