தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியவர் மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

கடந்த வருடம் கொரானோவுக்குப் பிந்தைய பாதிப்புகளால் அகால மரணமடைந்தார். அவரது மறைவு இசை ரசிகர்களையும், சினிமா பிரபலங்களையும் ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தியது.

எஸ்பிபி மறைந்து ஒரு வருடம் ஆனாலும் அவரது பாடல்களால் இன்றும், என்றும் ரசிகர்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பார்.

சிவா இயக்கத்தில் இமான் இசையமைப்பில் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் ரஜினிக்காக ஓபனிங் பாடல் ஒன்றைப் பாடியிருந்தார் எஸ்பிபி. அப்பாடலை இன்று யு டியுபில் வெளியிட்டுள்ளார்கள்.

ரஜினிக்காக எஸ்பிபி கடைசியாகப் பாடியது ‘அண்ணாத்த’ படத்தில் இடம் பெற்ற ‘அண்ணாத்த அண்ணாத்த’ பாடல்தான் ரஜினிக்காக எஸ்பிபி கடைசியாகப் பாடிய பாடலாக அமைந்துவிட்டது.

ரஜினி படங்களில் அவரது ஓபனிங் பாடலும், எஸ்பிபி குரலும் பிரிக்க முடியாதவை. இருவரும் இணைந்து எத்தனையோ சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறார்கள்.

‘அண்ணாத்த’ பாடல் இன்று வெளியானதைத் தொடர்ந்து எஸ்பிபியை நினைவு கூர்ந்து ரஜினிகாந்த், “45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்,” எனப் பதிவிட்டுள்ளார்.