தமிழில் ‘மைனா’ படம் மூலம் பிரபலமான அமலா பால் அதன் பின் விஜய், சூர்யா, தனுஷ் ஆகிய முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்தார்.

தற்போது இணையத் தொடர்களிலும் நடித்து வருகிறார் அமலா பால்.
 
சமீபத்தில் அவர் நடித்த ‘பிட்ட கதலு’ என்ற தெலுங்கு இணைய தொடர் பாராட்டுக்களைப் பெற்றது. அடுத்து கன்னட இயக்குநர் பவன் குமார் இயக்கத்தில் ‘குடி எடமைதே’ என்ற தெலுங்கு இணைய தொடரில், குடிக்கு அடிமையான, நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்து பாராட்டுக்களைப் பெற்றுள்ளார். இந்த இணைய தொடர் சில தினங்களுக்கு முன்புதான் வெளியானது.

தனது இணைய தொடர்கள் பற்றி அமலா பால் கூறுகையில்,

“நான் சினிமாவுக்கு வந்து 12 வருடங்கள் ஆகிவிட்டது. ஆரம்பத்தில் ஓய்வே இல்லாமல், தொடர்ச்சியாக பல படங்களில் நடித்திருக்கிறேன். நிறைய ஏற்ற இறக்கங்களை சந்தித்திருக்கிறேன். எனது தனிவாழ்வில் நிறைய பிரச்சனைகளையும் கடந்து வந்திருக்கிறேன். 

சினிமா நிறைய கற்றுக்கொடுத்திருக்கிறது. இப்போது இந்த இடத்தில் இருப்பது மகிழ்ச்சியே. இனி எனக்கு சவால் தரும் பாத்திரங்களிலும், மிக நல்ல படைப்புகளிலும் நடிக்கவே விரும்புகிறேன். தற்போது என்னை நானே புதிப்பித்துக் கொண்டிருக்கிறேன். 

எனது நடிப்பிற்காக, தனித்த முறையில்  பாராட்டுக்கள்  கிடைத்து வருவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. மிகுந்த கவனத்துடன்தான், நான் நடிக்கும் படைப்புகளைத் தேர்வு செய்து வருகிறேன். இப்போது நிறைய நல்ல வாய்ப்புகள் என்னை தேடி வந்து கொண்டிருக்கிறது.

‘பிட்ட கதலு’ தொடர் எனக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. அதன் இயக்குநர் நந்தினி மூலம்தான், இயக்குநர்  பவன் குமார் அறிமுகமும், இந்த வாய்ப்பும் கிடைத்தது. சிக்கலில் சிக்கிகொள்ளும் ஒரு போலீஸ் அதிகாரி என்பதைத் தாண்டி, இதில் என்ன சுவாரசியம் இருக்கிறது எனக்கேட்டேன்.  

துர்கா எனும் காவல் அதிகாரி பாத்திரம், குடிக்கு அடிமையாகி மீளத்துடிக்கும் பாத்திரம். அது எனக்கு இன்னும் சுவாரசியமாக, சவால்கள் நிறைந்ததாக இருந்தது. பவன் குமார் மிகச்சிறந்த படைப்பாளி. அவரின் எழுத்தும் அதை அவர் திரைக்கு மாற்றும் வித்தையும் அபாரமானதாக இருக்கிறது. முடிந்த வரை அனைத்தும் இயல்பாக, தத்ரூபமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார். ரசிகர்களை வசப்படுத்தும் வித்தை அவருக்கு தெரிந்து இருக்கிறது. 

இந்தத் தொடரில் நிறைய சுவாரசியங்கள் இருக்கிறது. இது டைம் லூப் சயின்ஸ் பிக்சன்,  ரசிகர்களுக்கு ஒரு புதிதான அனுபவமாக இருக்கும். இதுவரையிலும் இந்தத் தொடரை பார்த்த ரசிகர்கள் என் கதாபத்திரத்தை கொண்டாடி வருவது மனதிற்கு பெரும் மகிழ்ச்சி.

தற்போது  பாலிவுட் தயாரிப்பாளர் மகேஷ் பட் தயாரிப்பில், பாலிவுட் 1970 காதல் கதை ஒன்றில் நடித்திருக்கிறேன். அந்தத் தொடர் விரைவில் வெளிவரவுள்ளது. 

எனது சொந்தத் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் ‘Cadaver’ திரைப்படமும் விரைவில் நிறைவு பெறவுள்ளது. இனி என்னை, நிறைய புதுமையான பாத்திரங்களில் நீங்கள் ரசிக்க முடியும்,“ என்கிறார்.