ஸ்பெயின் திரைப்பட விழாவில் ‘லென்ஸ்’

Release Date:21 Apr 2016
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் (Clam - Festival Internacional de Cinema Solidari) திரையிட ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கிய ‘லென்ஸ்’ படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பார்சிலோனா நகரில் வரும் ஏப்ரல் 28 ம் தேதி முதல் மே 8-ம் தேதி வரை இந்த திரைப்பட விழா நடக்கிறது. மே 7-ம் தேதி மாலை 4 மணிக்கு லென்ஸ் திரைப்படம் சப் டைட்டிலோடு திரையிடப்பட உள்ளது. இந்த போட்டிப் பிரிவில் பெல்ஜியம், ஸ்பெயின், பெரு, ஆஸ்திரேலியா மற்றும் இத்தாலி படங்களுடன் மோதும் ஒரே இந்தியப் படம் ‘லென்ஸ்’ மட்டும்தான். இந்தத் திரைப்பட விழாவின் போட்டிப் பிரிவில் ‘லென்ஸ்’ படம் திரையிடப்படுகிறது. தமிழ் - ஆங்கில வசனங்களோடு உருவாக்கப்பட்டுள்ள லென்ஸ் படம் ஏராளமான பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. சமீபத்தில் இந்தப் படத்துக்கு கொல்லப்படி சீனிவாஸ் விருது வழங்கப்பட்டது நினைவிருக்கலாம். புனே, சென்னை, பெங்களூரு, டெல்லி போன்ற நகரங்களில் நடந்த சர்வதேச திரைப்பட விழாக்களில் இந்தப் படம் திரையிடப்பட்டு பாராட்டுகள் பெற்றது. பார்சிலோனா விழாவுக்கு லென்ஸ் படம் தேர்வாகி இருப்பது குறித்து படத்தின் இயக்குநர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் கூறுகையில், " லென்ஸ் படம் இந்தியாவுக்கு வெளியே ஒரு சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்வது இதுதான் முதல்முறை. அதுவும் போட்டிப் பிரிவுக்கு இந்தப் படம் தேர்வாகியுள்ளது எங்களுக்கு புதிய கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது. சினிமாவுக்கு குறிப்பிட்ட மொழி கிடையாது என்பதை நம்பி இந்தப் படத்தை உருவாக்கியுள்ளேன். படத்துக்கு அபாரமான பாராட்டுக்களும் சாதக விமர்சனங்களும் வந்த வண்ணம் உள்ளன. விரைவில் இந்தியாவில் இந்தப் படம் வெளியாகவிருக்கிறது. பொது மக்களின் பார்வையில் இந்தப் படம் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள ஆவலோடு காத்திருக்கிறேன்," என்றார்.

Share via:

Movies Released On July 27