டி.ஆரை விமர்சிக்க யாருக்கும் அருகதை இல்லை - பேரரசு பேச்சு

Release Date:22 Jun 2015
‘விழித்திரு’ படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று சென்னை, தேவி திரையரங்கில் நடைபெற்றது. மேடை வழிய திரையுலகினர் அமர்ந்திருக்க இயக்குனர் மீரா கதிரவனைப் பற்றி ஒவ்வொருவரும் அவர்களது பேச்சில் வாழ்த்திப் பேசினர். ‘அவள் பெயர் தமிழரசி’ படத்தையடுத்து மீரா கதிரவன் இயக்கி வரும் படம் ‘விழித்திரு’. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட டி.ஆர் பற்றியும் ஒவ்வொருவரும் அவர்களது பேச்சில் பாராட்டி, சீராட்டினர். இயக்குனர் பேரரசு பேசும் போது, “நான் டி.ஆர்-ன் தீவிர ரசிகன். அவருடைய படம் வெளியானால் 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு சைக்கிள் மிதித்துக் கொண்டு சென்று படம் பார்ப்பேன். “ராகம் தாளம் பல்லவி, நெஞ்சில் ஒரு ராகம், உயிருள்ளவரை உஷா” என அவருடைய ஒவ்வொரு படங்களையும் தவறாமல் பார்த்திருக்கிறேன். ஏன், அவர் இசையமைத்த படம் வந்தால் கூட போய்ப் பார்ப்பேன். உதவி இயக்குனராகப் பணி புரிந்த காலத்தில் படப்பிடிப்புக்கு போகிறாயா, இசையமைப்புக்குப் போகிறாயா என்று கேட்ட போது, இசையமைப்புக்குப் போனேன். ஏனென்றால் அந்தப் படத்திற்கு இசையமைத்தது டிஆர். இசைஞானமே இல்லாமல், வாயாலேயே தாளம், ரிதம் அனைத்தையும் சொல்லி இசையமைப்பார். ‘வல்லவன்’ படத்தில் சிம்பு என்னை ஒரு பாடல் எழுதக் கூப்பிட்டார். அப்போது ‘திருப்பதி’ படத்தின் படப்பிடிப்பு பிஸியாகப் போய்க் கொண்டிருந்தது. முதலில் தயங்கினேன், ஆனால், பாடலைப் பாடப் போவது டிஆர் என்று சிம்பு சொன்னதுமே படப்பிடிப்பு இடைவெளியில் பாடலை எழுதிக் கொடுத்தேன். அந்தப் பாடல்தான் ‘அம்மாடி...ஆத்தாடி...உன்னை எனக்குத் தர்றியாடி...’ பாடல். அந்தக் காலத்தில் பெரிய நட்சத்திரங்களின படங்கள் லட்சங்களில் வசூலித்துக் கொண்டிருந்த போது டி.ஆரின் படங்கள்தான் கோடி ரூபாயை முதன் முதலில் தொட்டன. ஹீரோ என்பதற்குரிய இலக்கணத்தை உடைத்தெறிந்து தன்னையும் ஹீரோவாக்கி பல வெற்றிகளைக் குவித்தவர். அப்படி தன்னுடைய திறமையால் முன்னுக்கு வந்த டிஆரை விமர்சிக்கும் உரிமை இங்கு யாருக்குமே இல்லை. அதிர்ஷ்டத்தில் ஜெயிப்பவர்கள் அப்போதைக்கு பளிச் எனத் தெரிவார்கள், அப்புறம் காணாமல் போய் விடுவார்கள். திறமையால் ஜெயிப்பவர்கள் கல்வெட்டு போன்றவர்கள். டி.ஆர். கல்வெட்டு போன்றவர்,” என பேரரசு பேசினார். பின்னணிப் பாடகராக இருக்கும் சத்யன் மகாலிங்கம் இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். நேற்றைய நிகழ்ச்சியில் டி.ஆர். இசைத்தட்டை வெளியிட மற்றவர்கள் பெற்றுக் கண்டனர். விழாவில் படத்தில் நடிக்கும் வெங்கட் பிரபு, எஸ்.பி. சரண், கிருஷ்ணா, தன்ஷிகா, அபிநயா, பேபி சாரா, தம்பி ராமையா மற்றும் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் எஸ். தாணு, தேனப்பன், கதிரேசன், சிவா மற்றும் இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், சமுத்திரக்கனி, எஸ்.பி.ஜனநாதன், சீனு ராமசாமி, லட்சுமண், கண்ணன், நடிகர்கள் அருண்பாண்டியன், அரவிந்த் ஆகாஷ், இசையமைப்பாளர்கள் சந்தோஷ் நாராயணன், சத்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  

Share via:

Movies Released On July 15