சிவகார்த்திகேயன் 14வது படம் இன்று ஆரம்பம்

Release Date:27 Jun 2018
‘ரெமோ, வேலைக்காரன்’ ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சிவகார்த்திகேயன், சமந்தா நடித்து வரும் ‘சீமராஜா’ படத்தைத் தயாரித்து வருகிறது. இந்தப் படத்திற்குப் பிறகு அந் நிறுவனம் சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்ஷன் படத்தை தமிழ், தெலுங்கில் இன்று ஆரம்பித்துள்ளது. ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிகுமார் இயக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். கதாநாயகியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். கருணாகரன், யோகி பாபு, கோதண்டம், பானுப்ரியா ஆகியோரும் நடிக்கிறார்கள். சிவகார்த்திகேயனின் 14வது படமாக உருவாகும் இந்தப் படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பாக ஆர்.டி.ராஜா பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். படம் பற்றி அவர் கூறியதாவது, "எங்கள் முந்தைய படங்களான ‘ரெமோ’ மற்றும் ‘வேலைக்காரன்’ வெற்றியின் மகிழ்ச்சியை விட, இப்போது எங்களுக்கு அதிகப் பொறுப்புகள் உள்ளதாக உணர்கிறோம். ஒரு தயாரிப்பாளராக, ரவிக்குமாரின் மயக்கும் கதை சொல்லலை நான் உற்சாகமாக கேட்டேன். புதுமையான விஷயங்களை அசாதாரணமாக விவரிப்பதை கண்டு வியந்தேன். அதே சமயம், தயாரிப்பாளராக இந்த படத்தைப் பற்றி நான் எப்படி வடிவமைக்கப் போகிறேன் என்பதைப் பற்றியும் எனக்கு நிறைய கேள்விகள் எழுகின்றன. உலகளவில் புகழ் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் சார் இந்த படத்திற்கு இசையமைக்க ஒப்புக் கொண்டது எங்களை மகிழ்ச்சியின் உச்சத்துக்கே கொண்டு சென்றது. மேலும், நீரவ் ஷாவின் ஒளிப்பதிவை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. ஒவ்வொரு படத்திலும் ஒளிப்பதிவில் மாய வித்தைகளை அவர் செய்யத் தவறியதில்லை. ஒரு நிறுவனமாக எங்கள் வளர்ச்சிக்கு எப்போதும் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் இயக்குனர் முத்துராஜ், படத்தில் பணிபுரியும் மற்ற புகழ்பெற்ற தொழில்நுட்ப வல்லுனர்களுடன் போட்டியிடும் சவாலுக்கு தயாராகி விட்டார்,” என்கிறார். இன்று நடைபெற்ற பூஜையில் படக் குழுவினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Share via: