காவிரி பிரச்சினைக்காக கையை அறுத்துக் கொண்ட மதுமிதா ?

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியிலிருந்து கடந்த சனிக்கிழமை, விதிகளை மீறியதாகச் சொல்லி மதுமிதாவை வெளியேற்றினார்கள். மதுமிதா தற்கொலைக்கு முயற்சித்தார் என்று பல ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. ஆனால், மதுமிதாவுக்கு அன்றைய தினம் நடந்தது என்ன, எதற்காக அவரது கையில் கட்டு கட்டப்பட்டிருந்தது என்று நிகழ்ச்சியிலும் எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதனிடையே, காவிரி பிரச்சினை பற்றிப் பேசித்தான் மதுமிதாக கையை அறுத்துக் கொண்டதாக சமூக வலைத்தளங்களில் பரவலாக கருத்துகள் பதிவாகி வருகின்றன. ‘ஹலோ மொபைல் ஆப்’ டாஸ்க் ஒன்றில் அவர்களது பக்கங்களில் பதிவிடுவதற்காக போட்டியாளர்கள் ஏதாவது கருத்தைச் சொல்லலாம் என்றார்கள். அதில் கலந்து கொண்டவர்களில் மதுமிதா பேசியதைத் தவிர மற்றவர்களின் கருத்துக்கள் டிவியில் ஒளிபரப்பாகின. ஆனால், மதுமிதாவின் கருத்தை ஒளிபரப்பவேயில்லை. அதில்தான் மதுமிதா காவிரி பிரச்சினை பற்றி பேசினார் என்கிறார்கள். வேறு சிலரோ, அவர் சேரனுடன் காவிரி பிரச்சினை பற்றி விவாதித்துக் கொண்டிருந்த போது, வருணபகவானும் கர்நாடகாதான் போலிருக்கிறது. நமக்கு மழையும் வரவில்லை, காவிரியில் தண்ணீரும் வரவில்லை என மதுமிதா சொன்னாராம். அப்போது அதைக் கேட்ட ஷெரின், எப்படி இந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேசலாம் என சண்டை போட்டாராம். மதுமிதா மீது ஏற்கெனவே கடுப்பில் இருந்த ஐவர் அணியான கவின், சாண்டி, முகேன், தர்ஷன், லாஸ்லியா இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பிரச்சினையை மேலும் பெரிதாக்கியிருக்கிறார்கள். தமிழ், தமிழ் எனப் பேச வேண்டாம் என்றும், அவ்வளவு பாசம் இருந்தால் காவிரிக்காக நீ உயிரை விடுவாயா என்று கேலி செய்தார்களாம். தன்னைக் கிண்டல் செய்ததைப் பொறுக்க முடியாத மதுமிதா கத்தியால் கையை அறுத்துக் கொண்டார் என்றும் சொல்கிறார்கள். அப்போது சேரன், கஸ்தூரி மட்டுமே மதுமிதாவுக்கு ஆதரவாகப் பேசி அவரைக் காப்பாற்றியிருக்கிறார்கள். அதனால்தான், நேற்று நாமினேஷனில் சேரன், கஸ்தூரி இருவரது பெயரையும் ஐவர் அணி பேசி வைத்து சேர்த்திருக்கிறது. தமிழ் மக்களுக்காகவும், தமிழ்நாட்டுக்காகவும் காவிரி பிரச்சினை பற்றிப் பேசப் போய் கூட இருந்த மற்ற தமிழர்களாலேயே ஏளனத்துக்கு ஆளாகியுள்ளார் மதுமிதா என்கிறார்கள். நடந்தது என்ன என்பதை பிக் பாஸ் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் முழுமையாக ஒளிபரப்ப வேண்டும். காவிரி பிரச்சினையால்தான் மதுமிதா அப்படி நடந்து கொண்டார் என்றால், கமல்ஹாசன் அதை அப்படியே ஒளிபரப்ப சொல்லியிருக்கலாமே, அவரும் சேர்ந்து இதை ஏன் மறைக்க வேண்டும் என்றும் பலர்  சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்புகிறார்கள். தற்கொலை முயற்சி என்பது சாதாரண விஷயமல்ல. முதல் சீசனில் நீச்சல் குளத்தில் விழுந்து ஓவியா தற்கொலைக்கு முயன்றார் என்ற பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை நிகழ்ச்சியை விட்டு நீக்கினார்கள். இரண்டாவது சீசனில் டேனியிடம் தரக்குறைவாக சண்டை போட்ட மகத்தை ரெட் கார்டு காட்டி வெளியேற்றினார்கள். மூன்றாவது சீசனில் ஏற்கெனவே சரவணன் விமர்சனத்துக்கு ஆளாகி வெளியேற்றப்பட்டார். தாங்கள் நியாயமாக நடந்து கொள்கிறோம் என சொல்லிக் கொள்ளும் பிக் பாஸ் நிகழ்ச்சி அமைப்பாளர்கள், அந்த நியாயத்தை மதுமிதா விவகாரத்தில் காட்ட மறுப்பது ஏன் எனப் பலரும் கேள்வி கேட்கிறார்கள்.