தர்பார் - விமர்சனம்

09 Jan 2020
கதை மும்பை மாநகரில் போலீசாரின் கெடுபிடி அதிகம் இல்லாததால் போதைப் பொருள் கடத்தல், பெண்கள் கடத்தல் என பல அட்டூழியங்கள் நடக்கின்றன. அவற்றை முற்றிலுமாக ஒழிக்க போலீஸ் கமிஷனராக நியமிக்கப்படுகிறார் ரஜினிகாந்த். வந்ததுமே தனது அதிரடியை ஆரம்பித்துவிடுகிறார். போதைப் பொருள் கடத்தல், பெண்கள் கடத்தலுக்குக் காரணமான ஒருவனைக் கண்டுபிடித்து கைது செய்கிறார். ஆனால், அவனின் அப்பா ஆள் மாறாட்டம் செய்து வேறு ஒருவரை சிறையில் வைக்கிறார். அதைக் கண்டுபிடிக்கும் ரஜினிகாந்த் சமயோசிதமாக அவனை சிறைக்குள்ளேயே சுட்டுத் தள்ளுகிறார். அந்தக் கடத்தல்காரன் தான் படத்தின் வில்லனான சுனில் ஷெட்டியின் மகன். தன் மகனைக் கொன்ற ரஜினியைப் பழி வாங்க வெளிநாட்டிலிருந்து வருகிறார் சுனில். ஒரு விபத்தை ஏற்படுத்தி ரஜினியின் மகள் நிவேதா தாமஸைக் கொலை செய்கிறார். அதனால் துடித்துப் போகும் ரஜினிகாந்த், மகள் கொலைக்கு பழி வாங்க வீறு கொண்டு எழுகிறார். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. நடிப்பு படத்தில் காட்சிக்குக் காட்சி ரஜினி, ரஜினி, ரஜினி, ரஜினி என நிறைந்திருக்கிறார். ஒரு சில காட்சிகளில் மட்டும்தான் ரஜினி இல்லை. இருந்தாலும் அந்தக் காட்சிகளிலும் ரஜினியைப் பற்றித்தான் பேசுகிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினியின் ஹீரோயிசத்தை அவரது ரசிகர்கள் ஆர்ப்பரிக்கும் அளவிற்கு அட்டகாசமாய் கொடுத்திருக்கிறார் இயக்குனர் முருகதாஸ். ரஜினியிடம் என்ன ஒரு சுறுசுறுப்பு, விறுவிறுப்பு, பரபரப்பு. அவரது வேகத்திற்கு இன்றைய வேறு முன்னணி ஹீரோக்கள் கூட நிச்சயம் ஈடு கொடுக்க முடியாது. தனி ஒருவனாக தர்பார் படத்தை தாறுமாறாக ரசிக்க வைக்கிறார் ரஜினிகாந்த். ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ். ஒரு அப்பாவிற்கு இப்படிப்பட்ட மகள்கள் அமைவது வரம். இல்லையென்றால் அப்பாவிற்கு நயன்தாரா போன்ற பெண்ணைப் பார்த்து காதலிங்கப்பா என்று சொல்வார்களா ?. இருவர் சம்பந்தப்பட்ட சென்டிமென்ட் காட்சிகள் நெகிழ வைக்கும். ரஜினிக்கு ஒரு கதாநாயகி வேண்டும் என்பதற்காக நயன்தாராவை நடிக்க வைத்திருக்கிறார்கள். அவர் யார் என்ன என்பதெல்லாம் தேவையில்லை என இயக்குனர் நினைத்துவிட்டார் போலிருக்கிறது. சில காட்சிகளில் மட்டும்தான் வருகிறார் நயன்தாரா. அப்பா, மகள் சென்டிமென்ட் அலையில் அவர் காணாமல் போய்விடுகிறார். வில்லனாக சுனில் ஷெட்டி, ரஜினிக்கு எதிராக நடிக்க வேண்டுமென்றால் தனி பலம் வேண்டும். அது சுனிலிடம் குறைவாகவே இருக்கிறது. ஒரே ஒரு காட்சியில் மட்டும் தன் கொடூரத்தைக் காட்டுகிறார். ரஜினிக்கு உதவியாளராக யோகி பாபு. கிடைக்கும் கேப்பில் ரஜினியைப் பாராட்டியும், கொஞ்சம் நக்கலடித்தும் சிரிக்க வைக்கிறார். இசை, மற்றவை அனிருத் இசையில் ‘சும்மா கிழி’ பாடல் மட்டுமே கிழிக்க வைக்கிறது. மற்ற பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். ஆனால், பின்னணி இசையில் ரஜினியின் ஒவ்வொரு காட்சியையும் ஒரு என்ட்ரி போல நினைத்து அதிரடி கொடுத்துள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு, ராம் லட்சுமண் சண்டைக் காட்சிகள் படத்திற்கு பக்கபலம்.

ரஜினி, ரஜினி, ரஜினி..ரஜினி மட்டுமே... - சில யூகிக்க முடிந்த காட்சிகள்

Share via: